108 திருப்பதி அகவல் போற்றி

சீர் திருவரங்கா போற்றி
ஆர் திரு உறையூர் அன்பா போற்றி
பொழிலார் கரம்பனூர் புயலே போற்றி

எழிலார் திருவெள்ளறையாய் போற்றி
இஞ்சி சூழ் அன்பில் ஈசா போற்றி
தஞ்சை மாமணித் தளியாய் போற்றி
புள்ளம் பூதங்குடியாய் போற்றி
நள்ளம் திருப்பேர் நம்பீ போற்றி
ஆதனூர் எழுந்தருள் ஸ்ரீதரா போற்றி

Vaarthaamaalai Gems

வார்த்தாமாலையினைத் தொகுத்தவர் பின்பழகிய பெருமாள் ஜீயர் .இவர் ஐப்பசி சதயத்தில் அவதரித்தவர், ,திருக்கலிகன்றிதாசரென்கிற நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமானவர்.இந்த நூலில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் தத்வஹித புருஷார்த்தங்கள் பற்றியும் , ரஹஸ்யத்ரயம் ,அர்த்தபஞ்சகம் முதலானவை பற்றியும் பல பூர்வாசார்யர்களின் விளக்கங்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்னூலில் 456 வார்த்தைகள் உள்ளன.இவற்றின் பொருளை சாமான்ய மக்கள் அறிந்து கொள்வது கடினம்.அதற்கான எளிய நடை விவரணத்தைப் புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி அய்யங்கார் எழுதியுள்ளார்.அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே தருகிறோம்.

92 ஆம் வார்த்தை – பட்டினிப்பெருமாளும் திருடர்களும்

உடையவர் காலத்தில் யோகிகளைப் போல் பட்டினி கிடக்கும் நபர் ஒருவர் பட்டினிப் பெருமாள் என்ற பெயருடன் வாழ்ந்து வந்தார்.இவர் எம்பெருமானார் கோஷ்டியில் தாம் அன்வயிக்கும் பேற்றையே பெறும் பேறாக எண்ணிக்கொண்டு பெரியபெருமாள் பெரியபிராட்டியார் திருவடிவாரத்தில் (திருவரங்கத்தில் ஏதோ ஒரு தோப்பில்) ஏகாந்தமாக யோக நிஷ்டையில் அமர்ந்து தன்னையே மறந்த நிலையில் தியானம் செய்து கொண்டிருந்தார் . இவர் இப்படி யோக நிஷ்டையில் இருக்கும்போது ஒரு நாள் சில திருடர்கள் அந்தத் தோப்பில் தாங்கள் கொள்ளயடித்த பொருட்களை பங்கு பிரித்துக்கொண்டிருந்தனர்.அப்போது திருடர்களில் ஒருவன் பட்டினி பெருமாளைப் பார்த்து திடுக்கிட்டு அவர் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவாரோ என அச்சம் கொண்டான்.அதற்கு இன்னொரு திருடன் சொன்னான் ” இந்த தோப்பில் இருக்கும் மரங்கள் என்றைக்குப் பேசுமோ அன்று தான் இந்தப் பட்டினி பெருமாளும் பேசும்( என்று அஃறிணையில் சொன்னான் ) “.இந்த உரையாடலை அங்கு தற்செயலாக வந்த ராமானுசர் கேள்வியுற்று பட்டினிப்பெருமாளின் நிஷ்டையைக் கொண்டாடியருளினார் என்பது 92 ஆம் வார்த்தையின் விவரணம்.