Return of NamperumaaL – NamperumaaL Asthaanam Thirumbiya naaL

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

2010 மே, 31ஆம் நாள், நம்பெருமாள் திருவரங்கத்தை விட்டு அகன்று மீண்டும் 639 ஆண்டுகளுக்குப் பின்பு திருவரங்கத்திற்கு வந்து சேர்ந்த நாள். அதைப் பற்றிய சில சிந்தனைகள்.
1) ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபீடத்தை அலங்கரித்தவர்களில் மணக்கால் நம்பியும் ஒருவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.929 -1006. இவர் காலத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது (இதை ஒட்டியர் கலகம் என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.) பாதுகாப்புக் கருதி அழகியமணவாளன் திருமாலிருஞ்சோலையில் ஓர் ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார்.
2) திருமாலிருஞ்சோலை வைகானஸ அர்ச்சகர்கள் ஒரு வருட காலம் அழகியமணவாளனை ஆராதித்து வந்தனர். திருவரங்கத்தில் ஒட்டியர் கலகம் ஒடுக்கப்பட்டவாறே மீண்டும் அழகியமணவாளன் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார். ஆனால் முன்பு ஆராதனம் செய்து வந்த பாஞ்சராத்ரிகள் கலகத்தின்போது ஊரைவிட்டு அகன்றதாலோ அல்லது கொல்லப்பட்டதாலோ, ஆராதனங்களைச் செய்வதற்கு யாரும் இல்லாததால் வைகானஸ அர்ச்சகர்களே திருவரங்கத்தில் பெரியபெருமாளுக்கு ஆராதனம் செய்து வந்தனர். சுமார் 80 ஆண்டுகள் இவர்கள் திருவரங்கம் கோயிலில் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வந்தனர். இராமானுசர் காலத்தில்தான் (கி.பி. 1017-1137) திருவரங்கத்தில் மீண்டும் பாஞ்சராத்ரிகள் ஆராதனத்தில் பங்கு கொண்டனர்.
3) கி.பி. 1310ஆம் ஆண்டு மாலிக்காபூர் படையெடுப்பின் போது அழகியமணவாளனின் அர்ச்சா திருமேனி வடக்கே எடுத்து செல்லப்பட்டது. உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லிவரை சென்று அழகியமணவாளனை மீட்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியோடு தொடர்புடையதுதான் துலுக்கநாச்சியார் வைபவம். அழகியமணவாளன் கொள்ளையடிக்கப்பட்டபிறகு ஆராதனத்தில் எழுந்தருளியிருந்தவர் அவரைப் போன்ற திருமேனி கொண்ட திருவரங்க மாளிகையார் ஆகும். அழகியமணவாளன் ஆஸ்தானம் திரும்பிய பிறகு திருவரங்க மாளிகையார் யாகபேரராக கொள்ளப்பட்டார்.
4) கி.பி. 1323ஆம் ஆண்டு நிகழ்ந்த உலூக்கானின் படையெடுப்பின்போது  அழகியமணவாளன் தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, முந்திரி மலை பள்ளத்தாக்கு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி, அழகியமணவாளம் கிராமம் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய பிறகு கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்)  திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார்.
5) கி.பி.2010 ஆம் ஆண்டு மே, 31ஆம் நாள் நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பி 639 ஆண்டுகள் ஆகின்றன. நம்பெருமாள் தென் தமிழகத்தில் பல பகுதிகளுக்குச் சென்று பல இன்னல்களை எதிர்கொண்டு நம்போல்வார் உய்வடைவதற்காக 48 ஆண்டுகள் கழிந்து ஆஸ்தானம் திரும்பிய நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை நாம் அதற்குரிய முறையில் கொண்டாடுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை உள்ளபடி அறிய இயலவில்லை. வரலாற்று உணர்வு நமக்கில்லை என்பதும் இதற்கொரு காரணமாகும்.
6) பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபம் எனப்படும் தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில்தான் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்தார். (ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபத்தில் நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணி நாம் மங்களாசாஸனம் செய்யலாமே. இதில் ஒன்றும் தவறில்லையே. ஏன் இதைச் செய்யக் கூடாது? பொது மக்கள் ஒன்றுகூடி அதிகாரிகளிடம் முறையிடலாமே?) திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந் தருளியிருந்ததால் யார் உண்மையான அழகியமணவாளன் என்பதைத் தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை. (ஆயிரக்கணக்கானோர் 1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டு முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை. அப்போது வயது முதிர்ந்த ஈரங்கொல்லி ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் ஈரவாடை தீர்த்தத்தை (திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீர்) சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” என்று அழைத்தான். அவன் இட்ட பெயரே இன்றுவரை வழங்குகிறது.  நம்பெருமாள் என்ற பெயர் ஒரு பாமரன் அன்புடன் இட்ட பெயராகும்.


ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, 214 கீழை உத்தர வீதி, திருவரங்கம்,திருச்சி-6. தொலைபேசி: 0431-2434398. http://www.srivaishnavasri.wordpress.com  மேலும் பல செய்திகளுக்கு எமது வெளியீடான “நம்பெருமாள் வனவாசம்” (விலை ரூ.10) என்ற நூலை மேற்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

Bhattar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

பட்டர் வைபவம்
1. ஸ்ரீபராசரபட்டர் என்னும் ஆசார்யரது திருநக்ஷத்ர உத்ஸவம் வைகாசி அனுஷ நக்ஷத்ரத்தில் கொண்டாடப் படுகிறது.(28-5-2010)
2. ஆசார்ய பரம்பரையில் இராமாநுசருக்குப் பிறகு எம்பாரும், அவருக்குப்பிறகு ஆழ்வானின் புத்திரரானான ஸ்ரீபராசரபட்டரும் அலங்கரித்து வந்தனர்.
3. ஸ்ரீபராசரபட்டர் விபவத்தில் இராமாவதாரத்திலும், அர்ச்சையில் பெரியபெருமாளிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
4. கூரத்தாழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் நம்பெருமாளது அரவணை ப்ரசாதத்தின் ப்ரபாவத்தாலே அவதரித்தனர்.
5. கூரத்தாழ்வானுக்கு இரட்டைப் பிள்ளைகள் திருவவதரித்த தினம்-சுபகிருத் வருடம் வைகாசி மாதத்தில் பௌர்ணமி திதியும் அனுஷ நக்ஷத்திரமும் கூடிய புதன்கிழமையாகும்.
6. நம்மாழ்வாரது திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் அர்த்த விசேஷங்களை உள்ளபடி உணர்ந்து வெளியிட வல்லவரானவர் இவர் என்பதற்கு அறிகுறியாக, இவரது திருவவதாரம் அந்த ஆழ்வாருடைய திருஅவதார தினமாகிய வைகாசி விசாகத்திற்கு அடுத்ததாக அமைந்தது என்னலாம்.
7. ஸ்ரீரங்கநாதன் இளங்குழந்தைப் பருவத்திலேயே பட்டரைத் தமது புத்திரனாக அங்கீகரித்துத் தம்முடைய சந்நிதியிலே திருமணத்தூணின் அருகே தொட்டிலில் இடுவித்து ஸ்ரீரங்கநாச்சியாரும் தாமுமாகச் சீராட்டி வளர்க்க, அங்ஙனம் வளர்கிற அக்குழந்தை தவழ்ந்து சென்று, பெருமாள் அமுது செய்வதற்குத் திருமுன்பே கொணர்ந்து சமர்ப்பிக்கப்படுகிற   அடிசிலைக் கைகளால் அள்ளி அளைந்து துழாவ, பெருமாள் அதுகண்டு உகந்தருளி “அமிழ்தினுமாற்றவினிதே தம்மக்கள், சிறுø கயளாவியகூழ்” என்றபடி அந்த இன்னடிசிலை மிகவும் பிரியமானதாக அங்கீகரித்து அருள்வாராம்.
8. இப்படி ஸ்ரீரங்கநாதன் தம்மை அபிமானித்துப் புத்திரஸ்வீகாரஞ் செய்தருளப் பெற்ற பாக்கியம் பெற்றமையால், பட்டர் “ஸ்ரீரங்கநாதபுத்ரர்” எனப்படுவார்; வானிட்ட கீர்த்திவளர் கூரத்தாழ்வான் மகிழ வந்த தேனிட்டதார் நம்பெருமாள் குமாரர்…. பட்டர் (திருவரங்கக் கலம்பகம் – காப்புச்செய்யுள்) என்று பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் கூறியுள்ளார்.
9. பட்டர் ஐந்தாவது பிராயத்தில் ஒருநாள் திருவரங்கம் பெரிய கோயில் திருவீதியிலே புழுதி அளைந்து விளையாடுகிற போது, அநேக சாஸ்திரங்களில் வல்லவனான ஒரு வித்வான் ‘ஸர்வஜ்ஞபட்ட’னென்று பட்டப் பெயர் வைத்துக் கொண்டு அங்ஙனமே தன் பெயரைக் குறிப்பிட்டு ‘ஸர்வஜ்ஞபட்டர்’ வந்தார் என்பது முதலாகத் தன் பரிஜநங்களைக் கொண்டு விருது சொல்லி எக்காளம் ஊதுவித்துக் கொண்டு அதிக ஆடம்பரத்துடனே சிவிகை மீது வர, அதுகண்ட பட்டர், உடையவர் கூரத்தாழ்வான், முதலியாண்டான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார் முதலான பலபெரியோர்கள் எழுந்தருளியிருக்கிற இவ்விடத்திலே ஸர்வஜ்ஞ பட்டனென்று பெரும் பெயர் சொல்லி விருதூதிப் பல்லக்கேறி வருகிறான் இவன் யாரடா? என்று எண்ணித் தாம் அவன் எதிரில் சென்று கையிற் புழுதியை அள்ளியெடுத்து அவனைநோக்கி நீ ஸர்வஜ்ஞனன்றோ? இது எவ்வளவு? சொல், பார்ப்போம் என்று வினவினார்.
10. அவன் அதனைக் குறித்து அதிதீர்க்காலோசனை செய்தும் அது இத்தனையென்று தெரியாமையால், ஒன்றும் விடை சொல்ல மட்டாதே வெட்கத்தால் தலை கவிழ்ந்து மௌனத்தோடு நின்றிட்டான். பட்டர் அவனைப் பார்த்து இது ஒரு கைப்பிடிமண் என்று சொல்லி நீ கொண்ட பெயரைப் பொருளுள்ளதாக நிலை நிறுத்தி ஸர்வஜ்ஞன் என்ற விருதை மெய்ப்பித்துக் கொண்டு போக மாட்டாதே அஜ்ஞனாய் விட்டாயே! இனி உன்னுடைய விருதும் மற்றைய சின்னங்களும் எதற்காக? என்று ஏசி எக்காளம் முதலியவற்றைப் பறியுங்கள் என்று தம்முடன் விளையாடும் சிறுவர்களுக்குக் கூறினார்.
11. ஆழ்வான் தாமே பட்டர்க்கு வேத சாஸ்த்ரங்களைக் கற்பிக்க, எம்பார் பஞ்சஸம்ஸ்கார பூர்வமாக மந்திரங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் உபதேசிக்க, இவ்விருவரும் திருவாய்மொழி முதலிய திவ்வியப்பிரபந்தங்களையும் அவற்றின் வியாக்கியானங்களையும் சொல்லியருள, பின்பு பட்டர் ஆழ்வானிடமிருந்து ஸ்ரீபாஷ்யத்தை உபதேச க்ரமமாகப் பெற்று உபயவேதாந்தப் ப்ரவர்த்தகராய் விளங்கினார்.
12. இங்ஙனமிருக்கையில் ஒரு நாள் ஸ்ரீபாஷ்யகாரர் பட்டருடைய வேதாந்த உபந்யாஸ வைபவத்தைக் கேட்டு உகந்து அவர்க்கு வேதாந்தாசார்யர் என்ற சிறப்புப் பெயரைக் கொடுத்தருளினார்.
13. பிறகு எம்பெருமானார் திருமேனி தளர்ந்தவராய்ப் பரம பதமடையத் திருவுள்ளமாகி அடியார்கள் அனைவரையும் அழைத்துப் பட்டரைக் காட்டிக் கொடுத்து இவரை நம்மைப் போலவே பார்த்துக் கொள்ளுங்கள் என்று நியமித்துப் பட்டரைப் பெரிய பெருமாள் ஸந்நிதிக்கு அழைத்துக் கொண்டு போய்த் தமக்கு முன்னாக அவருக்குத் தீர்த்தப்பிரஸாதங்கள் கொடுப்பித்து அவரை நோக்கி கர்நாடகத்திலே வேதாந்தியென்று ஒரு பெரிய வித்வான் இருக்கிறதாகக் கேள்விப் படுகிறோம்; நீர் அங்கேபோய் அவரைத் திருத்தி நம் தரிசனப் பிரவர்த்த கனாக்கும் என்று அருளிச் செய்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
14. இராமாநுசர் நியமனத்தை சிரமேற்கொண்டு பராசர பட்டர் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் கொண்டு மாதவ சூரி எனப்படும் வேதாந்தி யைத் திருத்திப் பணிகொண்டு நஞ்சீயர் என்ற திருநாமம் சாற்றியருளினார். அன்று முதலாக நஞ்சீயர் பட்டரைப் பிரியாமல் அடிமைசெய்து கொண்டு அவர் திருவுள்ளத்துக்கு மேன்மேலும் உகப்பை விளைவிக்கப் பட்டரும் அவர்க்குச் சம்பிரதாய ரகசியார்த்தங்களை எல்லாம் அருளிச் செய்து திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் விசேஷார்த்தங்களையும் விவரிக்க நஞ்சீயர் அவற்றை ஆதரத்துடன் கேட்டுத் தம் நன்னெஞ்சிற் பூரித்துக்கொண்டு அவரருகிலேயிருந்தார்.
15.அக்காலத்திலே திருவரங்கம் பெரியகோயிலின் ஏழு திருச் சுற்றுக்களில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரமன் திருவீதித் திருமதிள் மிகவும் பாழ்பட்டு சரிந்துவிழ, அதனைச் சீர்படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீரசுந்தர பிரஹ்மராயன் எனும் சிற்றரசன் அந்தமதிளின் நேர்மைக்கு மாறாகப் பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது கண்டு முன்போலே மதிளை ஒதுக்கிக் கட்டாமல் அவர் திருமாளிகையை இடித்து நேரொழுங்காகத் திருமதிள்கட்டுவிக்க முயன்றான். அதனை அறிந்த பட்டர், அச்சிற்றரசனை நோக்கி, நீ கட்டுவிக்கிற திருமதிளோ பெருமாளுக்கு அரணாகும்; மகாபாகவதரான பிள்ளைப்பிள்ளையாழ்வான் போல்வோர் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து நம்பெருமாளுக்கு பாதுகாப்பாக அமைந்திருப்பதே உண்மையான அரணாகும்.
16. பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையைவிட்டு ஒதுங்கத் திருமதிள் கட்டுவிப்பதே உரிய செயலாகும் என்று நல்லுரை கூறினர். வீரசுந்தரன், ஆசாரியபுத்திரரென்ற அச்ச மின்றிப் பட்டரது வார்த்தையை மதியாமல், ஆழ்வானுக்கு அந்தரங்க சிஷ்யரென்ற பெருமையையும் பாராது பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையை இடித்துத் தள்ளி நேர்படத் திருமதிள் கட்டு வித்தான். இது காரணமாகப் பட்டர்க்கும் அவ்வரசனுக்கும் உண்டான மனத்தாங்கல் நாளடைவிலே மேலிட, வீரசுந்தரன் பட்டரை ஸ்ரீரங்கத்திலிருக்கவொட்டாது மிகவும் உபத்திரவிக்க, பட்டர் யாரிடமும் சொல்லாது கோயிலினின்று புறப்பட்டுத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளலானார். பிறகு சில ஆண்டுகள் கழித்து, வீரசுந்தரன் இறந்தவாறே பட்டர் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார்.
17. ஒரு கைசிக துவாதசியன்று பெருமாள் ஸந்நிதியிலே பராசர பட்டர் கைசிக புராணம் வாசித்தருளிய அழகினில் உகந்து, ‘பட்டரே உமக்கு மேல்வீடு தந்தோம்‘ என்று அருளிச் செய்ய, இவரும் ‘மஹா ப்ரசாதம்‘ என்று அங்கீகரித்தருளி பெருமாள் தம்மை விசேஷ கடாக்ஷம் செய்தருளின உபகாரத்தைச் சிந்தித்து, ‘நாயன்தே! ஆசன பத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித்தாமரைகளும் அஞ்சேல் என்ற கையும் கவித்தமுடியும் முறுவல் பூரித்த சிவந்த திருமுகமண்டலமும் திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்திலே கண்டிலேனாகில் ஒரு மூலையடியே முறித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன்‘ என்று நம்பெருமாளையும் பெரியபெருமாளையும் ஆபாதசூடம் (திருப்பாதம் தொடங்கி திருமுடிஈறாக) அநுபவித்து திருமாளிகைக்கு எழுந்தருள திருப்பதியிலுள்ளவர்கள் அடங்கத் திருமாளிகையிலே அமுது செய்தருளின பின்பு பெருங்கூட்டமாக எழுந்தருளியிருந்து, திருநெடுந்தாண்டகத்திற்கு அர்த்தம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே ‘அலம்பிரிந்த நெடுந்தடக்கை‘ என்கிற பாட்டுக்கு அர்த்தமருளிச் செய்கிறபோது, ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்‘ என்கிறவிடத்திலே
‘பறவையேறு பரம்புருடா நீ யென்னைக்கைக் கொண்டபின், பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்‘ என்று இத்தை இரட்டித்து அநுஸந்தித்தருளித் திருக்கண்களை மலரவிழித்துத் திருமேனியைச் சிலிர்ப்பித்துப் புன்முறுவல் செய்து திருமுடியிலே அஞ்சலி செய்து கொண்டு அணையிலே சாய்ந்து நிற்கச் செய்தே சிர: கபாலம் வெடித்துத் திருநாட்டுக்கெழுந்தருளினார். இதுபற்றியே இன்றும் கைசிக துவாதசியன்று பட்டருக்கு ப்ரம்ஹரத வைபவம் ஏற்பட்டுள்ளது.
***

Nammazhvaar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

நம்மாழ்வார் வைபவம்


 1. ப்ரபன்ன ஜன கூடஸ்தரான நம்மாழ்வார் அவதார திருநக்ஷத்திர வைபவம் வைகாசி 13ம்நாள் (27.5.2010) விசாக நக்ஷத்திரத்தில் நடைபெற உள்ளது.
 2. பரமவைதிக சித்தாந்தமாய்த் தமிழ்ப்பெருமக்களின் மதமாகிய வைணவ மதத்தின் தத்துவங்களை உலகிற்கு உபதேசித்து எங்கும் பரவச்செய்து அதனை வளர்த்த பெரியோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசாரியர்கள் என்றும் வழங்குவர்.
 3. ஆழ்வார்களுள் முதல்வராய் எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்குலகில் வந்த நம் சடகோபரே ஆசாரிய பரம்பரைக்கு முதல்வராவார்.
 4. ஞானதேசிகரான நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ்மறை நான்கனுள் சாமவேத சாரமான திருவாய்மொழியின் பொருள் விசேடங்களை வெளியிடுதற்கு ஆறாயிரப்படி முதலிய ஐந்து வியாக்கியானங்கள் அவதரித்திருப்பினும், ஆழ்வாருடைய பெருமையினையும் அருளிச் செயலின் சீர்மையினையும் “வகுளாபரணன் ஓவாதுரைத்த, தமிழ் மாமறையின் ஒருசொற் பொறுமோ உலகிற் கவியே” என்கிறபடியே திருவாய்மொழியின் ஒப்புயர்வற்ற சிறப்பினையும் இதில் சாரமாக அறியவேண்டிய உள்ளுறைப் பொருள்களையும் விசேடார்த்தங்களையும் அவ்வியாக்கியானங்கள் மூலமாக மற்றும் அறிய முடியாமையின், அவற்றை அறிவிக்கத் திருவுளங்கொண்டு “அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே” எனப்படுகின்ற தம் பரமகிருபையால் செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளில் சீரிய கூரிய தீஞ்சொற்களாலே இந்நூலை அருளிச்செய்து, தீதில் நன்னெறியை இதன் மூலம் உலகில் பரவச் செய்தார்.
 5.  ஆழ்வார்களின் தலைமை பெற்றவரான நம்மாழ்வார் நாலு வேதங்களின் ஸாரமாக அருளிச் செய்த திவ்யப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதிருவந்தாதி ஆகியவையாகும்.
 6. முதல் திவ்ய பிரபந்தமான திருவிருத்தம் ரிக்வேதஸாரமென்றும், இரண்டாவது திவ்யப்ரபந்தமான திருவாசிரியம் யஜுர் வேதஸாரமென்றும், மூன்றாம் திவ்யப்ரபந்தமான பெரியதிருவந்தாதி அதர்வண வேதஸாரமென்றும், நாலாவதாய், சரம ப்ரபந்தமான திருவாய்மொழி ஸாமவேத ஸாரமென்றும் பெரியோர்கள் நிர்வகிப்பர்.
 7. “இயற்பா மூன்றும் வேதத்ரயம் போலே;  பண்ணார் பாடல் பண்புரையிசை கொள் வேதம் போலே” (ஆசார்யஹ்ருதயம் நூற்பா-50) என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், அருளிச் செய்துள்ளார்.
 8. இவற்றுள் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியை உபநிடதங்களின் சாரம் என்றும் திராவிட வேதம் என்றும் போற்றுவர்.
 9. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் “செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே”, என்று அருளியபடியே திருவாய்மொழியானது உபநிடதங்களின் உட்கருத்தை விளக்குவதாகும்.
 10. 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய மணவாளமாமுனிகள் என்றும் ஆசாரியர் தாம் அருளிய திருவாய்மொழி நூற்றாந்தாதியில் “உயர்வே பரன்படியே உள்ளதெல்லாம் தான் கண்டு உணர்வேத நேர் கொண்டு உரைத்து…., என்று திருவாய்மொழியின் வேதமாம் தன்மையை எடுத்துக்காட்டியுள்ளார்.
 11. வேதமாவது எப்பொழுதும் ஒரே மாதிரியாய் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு உச்சரிக்கப்படும் சப்தங்களின் கூட்டம்.
 12. இவ்வேதமானது படைப்பின் ஆரம்பத்தில் எம்பெருமானால் நான்முகக் கடவுளுக்கு உபதேசிக்கப்பட்டு, அவனால் தமது சீடர்களுக்கு உபதேசிக்கப்பட்டு, சீடர்களுக்குச் சீடர்களான பரம்பரையாய் நமக்குக் கிடைத்திருக்கின்றது என்பர்.
 13. ஆதியில் வேதம்நான்கு வகைகளுடன் நூறு ஆயிரம் சாகை(கிளை)களுடன் கூடிய ஒரே விருக்ஷமாக (மரமாக) இருந்தது என்றும், துவாபர யுக முடிவில் வியாசரால் ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டது என்றும் சொல்லுவர்.
 14. பழையதான வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே எம்பெருமான் மனிதனாய் வந்து அவதாரங்கள் செய்தாற்போலே வேதமும் தமிழாய் வந்து ஆழ்வார்கள் மூலமாக வெளிவந்ததை ‘முந்தையாயிரம்’ என்பர்.
 15. வேதாந்த தேசிகர் என்னும் ஆசார்யர் தாம் அருளிய ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியின்’ முதல் ச்லோகம் மூலமாக நம்மாழ்வாருடைய திருவாய்மொழியானது உபநிஷத்து வாங்மயமான நூல்களின் ஸாரமானது என்று கூறுவர்.

Srirangam Koyil Vasanthothsavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

நம்பெருமாள் கண்டருளும் வைகாசி வஸந்தோத்ஸவமும்,
நின்றுபோன ப்ரஹ்மோத்ஸவமும்
ஐ. வஸந்தோத்ஸவம் :
1)அண்ணப்பஉடையார் காலத்தில் (கி.பி. 1436) தற்போதுள்ள வஸந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது.
2) இந்த வஸந்தோத்ஸதவத்திற்கு கேடாக்குழித் திருநாள் என்று பெயர். 
3) இவ்வாறு வஸந்தோத்ஸவம் நடைபெறுவதற்காக மல்லிதேவன் புத்தூர் என்ற கிராமம் திருவிடையாட்டமாகத் (தானமாகத்) தரப்பட்டது.
4)வழியடிமைநிலையிட்ட உத்தமநம்பி இந்த விழாவை அண்ணப்பஉடையார் சார்பில் ஏற்படுத்தி வைத்தார்.
5) இந்த அண்ணப்பஉடையார் ஆயிரங்கால் மண்டபத்தைப் புதுப்பித்து, ப்ரணவாகார விமானத்திற்கு பொன் மேய்ந்ததாக (மேய்ந்தது என்பது சரியான சொல்லே. வேய்ந்தது அல்ல.)அறியப்படுகிறது. (அ.கீ. Nணி. 72 ணிஞூ 1939)
6) நம்பெருமாள் வசந்த மண்டபத்திலிருந்து ஆஸ்தானத்திற்கு புறப்பாடு கண்டருளிய பிறகு ஆழ்வான் திருச்சுற்றிலுள்ள நாலுகால் மண்டபத்தினருகில் திவ்யப்பிரபந்த தொடக்கம் நடைபெறும்.
7) (முதல் நாள் – முதல் திருவந்தாதி, 2ஆம் நாள் – இரண்டாம் திருவந்தாதி, 3ஆம் நாள் – மூன்றாம் திருவந்தாதி, 4ஆம் நாள் – நான்முகன் திருவந்தாதி, 5ஆம் நாள் – திருவிருத்தம், 6ஆம் நாள் – திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, 7ஆம் நாள் – திருச்சந்த விருத்தம், 8ஆம் நாள் திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம், 9ஆம் நாள் – இராமானுச நூற்றந்தாதி).
8) நம்பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளும் போது கார்த்திகை கோபுர வாசலில் சாற்றுமுறை ஆகி, நம்மாழ்வார் ஸந்நிதியில் இயல்சாற்று நடைபெறும்.
9) இந்த உத்ஸவத்தின் அனைத்து நாட்களிலும் மண்டபத்தில் அரையர் திருப்பல்லாண்டு ஸேவித்திட சூர்ணாபிஷேகம் நடைபெறும்.
10) விஜயநகர மன்னர்கள் காலத்தில் பிரம்மோத்ஸவமாகக் கொண்டாடப்பட்டு வந்த உத்ஸவம், காலப்போக்கில் திரிபு பெற்று வஸந்தோத்ஸவமாக மாறுதலடைந்துள்ளது.
11) ஏக வஸந்தம் என்று தற்போது இந்த விழா குறிப்பிடப்படுகிறது.
12) மாலையில் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி கேடாக்குழி மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.
13) திருவாராதனம் கண்டருளிய பிறகு சூர்ணாபிஷேகம் நடைபெறும், )அதன் பிறகு தீர்த்த கோஷ்டி.
14) எட்டுத் திருநாளும் இப்படியே நடக்கும். 
16)உள்ளே எழுந்தருளும்போது ஸ்ரீரங்கநாய்ச்சியார் ஸந்நிதி வழியாக அந்த ப்ராகாரத்தை சுற்றுகையில் நாச்சியாருக்கு எதிராகத் திருவந்திக் காப்பு நடைபெறும்.
17) முதல் திருநாள், ஏழாந் திருநாட்களில் நம்பெருமாள் உபய நாச்சிமாரோடு உத்ஸவம் கண்டருளுவார்.
18) ஏழாந்திருநாள் ஸன்னிதி வாசலில் ஏற்பட்ட சூர்ணாபிஷேகமும், கொட்டார வாசலில் ஏற்பட்ட நெல் அளவும் இந்த உத்ஸவத்துக்கும் உண்டு. வைகாசி பௌர்ணமியன்று 9ஆம் திருநாள் நடைபெறும்.
19)அன்றைய தின உத்ஸவத்திற்கு ஏகவசந்தம் என்று பெயர். மாலை ஜயவிஜயாள் வாசலிலே குதிரை வாஹனம் ஏறி சூர்ணாபிஷேகம் கண்டருளி, சித்திரைவீதி வலம்வந்து, சந்திர புஷ்கரிணியில் ஸ்ரீசடகோபத்திற்கு தீர்த்தவாரி நடைபெற்று கேடாக்குழி மண்டபத்தில் திருமஞ்சனமாகி நம்பெருமாள் உள்ளே எழுந்தருளுவார்.
ஐஐ. ஸ்ரீரங்கநாய்ச்சியார் வஸந்தம் மற்றும் கோடைத்திருவிழா:
1) ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஏழு நாட்கள் வஸந்தோத்ஸவம் நடைபெறும்.
2) நாச்சியாருக்கும் கோடைத்திருநாள், வஸந்தோத்ஸவம் இவ்விரண்டும் உண்டு.
ஐஐஐ. வைகாசி மாதத்தில் 16ஆம் நூற்றாண்டில் நடைபெற்று வந்த ப்ரஹ்மோத்ஸவம் பற்றிய சில சிறப்புக் குறிப்புகள். இந்த உத்ஸவமே வசந்தோத்ஸவமாக மாற்றம் அடைந்துள்ளது.
1) நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருவீதியின் தெற்குப்பகுதி சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள, 5.5.1553 ஆம் தேதியிட்ட (ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண்.474. அ.கீ.Nணி.94 ணிஞூ 1937-38) கல்வெட்டு வைகாசி மாதத்தில் நடைபெற்ற ப்ரஹ்மோத்ஸவத்தைப் பற்றித் தெரிவிக்கிறது.
2) வைகாசி மாதம் விஜயநகர அளியராமராஜா பெயரில் ப்ரஹ்மோத்ஸவம் ஒன்று நடைபெற்றதைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ப்ரஹ்மோத்ஸவத்தின் முதல் நாள் தொடங்கி, தீர்த்தவாரி ஈறாக நடைபெறும் வைபவங்கள், நம்பெருமாள் உத்ஸவ நிமித்தமாக எழுந்தருளும் மண்டபங்கள் ஆகியவற்றைப் பற்றிய மிக நுண்ணிய செய்திகள் இந்தக் கல்வெட்டில் தரப்பட்டுள்ளன.
3) இந்தக் கல்வெட்டுக்கு இணையானதொரு கல்வெட்டை ஸ்ரீரங்கம் கோயில் கல்வெட்டுகளில் காண இயலாது.
4) ஆரவீடு ராமராஜாவின் உபயமாக வைகாசி மாதம் ரேவதி நக்ஷத்திரத்தில் கொடியேற்றம் ஆகி, பூச நக்ஷத்திரத்தில் தீர்த்தவாரி கொண்டாடும்படி ஏற்படுத்தப்பட்ட இந்த ப்ரஹ்மோத்ஸவத்தை நடத்திவைப்பதற்குப் பல ஊர்களில் நஞ்சை புஞ்சை நிலங்கள் நிவந்தங்களாக விடப்பட்டன. முதல் நாள் ரக்ஷாபந்தனம் மற்றும் கொடியேற்றம் ஆகியவற்றிற்கும், யாகசாலை திருமஞ்சனத்திற்கும் உரிய பொருள்களைப் பற்றிய விரிவான செய்திகள் காணப்படுகின்றன.
5) உத்ஸவத்தின் இரண்டாம் நாள் சேரநாதவேளாண் திருமண்டபம்,  மூன்றாம் நாள் பெரியதிருமண்டபம் மேலைப் பத்தி, நாலாம் திருநாள் பெரிய திருமண்டபம் கீழைப் பத்தி, 5ஆம் திருநாள் சூடிக்கொடுத்த நாச்சியார் ஸந்நிதி, 6ஆம் திருநாள் முதலாழ்வார்கள் கோயில் மண்டபம், 7ஆம் திருநாள் தேவர்கள் மண்டபம், 8ஆம் திருநாள் எல்லைக்கரை மண்டபம், ஆகியவற்றில் முறையே எழுந்தருளிய பிறகு, 9ஆம் திருநாள் பூச நக்ஷத்ரத்தில் திருத்தேர் உத்ஸவம் நடைபெற்று வந்தது. 5ஆம் திருநாளன்று நம்பெருமாள் உள்ளாண்டாள் ஸந்நிதிக்கு எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது.        ***

Chithirai ThirunaaL Flex 2

ஸ்ரீ:           
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

சித்திரை விருப்பன் திருநாள்-2
 17) எட்டாம் நாள் உத்ஸவத்தின்போது தேரடியிலும், த்வஜஸ்தம்பத்தின் அருகிலும், தலையிலே தேங்காய்களை உடைத்துக் கொள்வது, அவரவர் குடும்பத்தில் ஒருவர்மேல் நம்பெருமாள் ஆவேசம் கொள்ளுதல் ஆகிய நிகழ்ச்சிகளை இந்த பிரம்மோத்ஸவத்தின்போது காணலாம்.
 18) சித்திரைத் தேருக்கு முன்தினம் (8ஆம் திருநாளன்று) காலையில் நம்பெருமாள் வெள்ளிக்குதிரையில் வீதிவலம் வருதலை,  “குதிரை வாஹனமேறி, மன்னர்கள் பலரும் ஊழியம் புரிய, ஒளிவீசும் நவரத்தினங்கள் இழைத்த ஆபரணங்களை அணிந்துகொண்டு கஸ்தூரி ரங்கராஜா பவனி வருகிறார், வணங்குவோம் வாரீர்! சித்திரை திருவீதியில் வேட்கையுடன் அவன் எழுந்தருளும் சேவையைக் கண்டு வணங்குவோம் வாரீர்!” எனப் புலவர்கள் பாடியுள்ளனர்.
 19)“நம்பெருமாள் குதிரை மீதேறி வருவதே ஒரு தனி அழகு. குதிரையின் நடை அழகும், கடிவாளத்தைப் பிடித்து அமர்ந்து இருக்கும் ஒய்யாரமும், புன்சிரிப்புடன் மக்களை நலம் விசாரிக்கும் முறையில் திருக்கையின் அழகு ஆகிய இவை யாவும் அயோத்தியில் சக்ரவர்த்தி திருமகன் குதிரை மீதேறி வீதி உலா வருவது போலத் தோன்றும்” என்று பாடுகிறார் புலவர் ஒருவர். ராஜ வீதி என்று சித்திரை வீதிக்கு மற்றொரு பெயர் அமைந்துள்ளது.
 20) 8ஆம் உத்ஸவத்தன்று இரவு நம்பெருமாள் தங்கக்குதிரை வாஹனத்தில் வையாளி கண்டருளுவார். இந்த வையாளி திருவரங்கத்தில் உத்ஸவத்தின்போது காண வேண்டியதொரு காட்சியாகும்.
 21) இதனை “வையாளி நடையும், ஒய்யாரக் கொண்டையும் மெய்யாகவே சிறு பையனைப் போல் ஒய்யாரமாகவே ஐயன் வருகிற உல்லாச சேவை என் சொல்லுவேனடி” என்று பழம்பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
 22) திருவரங்கத்துத் தெற்கு சித்திரை கோபுரம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனால்  எடுக்கப்பெற்றதாகும்.   (கி.பி.1250 – 84)
 23) இக்கோபுர விதானத்தில் திருவரங்கத்தில் நிகழும் சில விழாக் காட்சிகள் வண்ணச் சிற்பங்களாகத் திகழ்கின்றன. (வாகனப் போக்குவரத்தால் இந்த வண்ணச் சிற்பங்கள்மீது கரிப்படலம் படிந்துள்ளது. அவற்றை நீக்கினால் இந்தக் காட்சியைக் காணலாம்)
 24) இவை கி.பி.17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நாயக்கர்கள் காலப் படைப்பாகும்.
 25) இவற்றில் அழகிய மணவாளன் (நம்பெருமாள்) முத்தங்கி தரித்துக் குதிரை வாஹனமேறித் திருவீதி பவனிவரும் காட்சி மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 26) இவ்வாறு  எழுந்தருளும் நம்பெருமாளுக்கு முன்னர் திருக்குடை, திருத்தொங்கல், திருச்சின்னம் முதலிய பரிச்சின்னங்கள் தாங்கிப் பலர் முன்னே செல்கின்றனர். ஆசார்யப்பெருமக்கள் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அருளிச்செயல் கோஷ்டியை அலங்கரித்து வருகின்றனர்.
 27) கொம்பு, பறை ஆகியவற்றை இசைக்க, அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவையும் ஊர்வலத்தின் முன்னர் செல்கின்றன. 18 வாத்யங்கள் முழங்க நம்பெருமாள் புறப்பாடு கண்டருளு வதை இந்த வண்ண ஓவியத்தில் காணலாம்.
 28) இந்த வண்ண ஓவியத்தில் திருவரங்கத்தில் நடைபெறும் கோண வையாளி என்னும் நிகழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது. 
 29) நம்பெருமாள் குதிரை வாஹனத்தில் உலா வரும்போது ஆடிக்கொண்டு  செல்லும் நிகழ்ச்சியே வையாளி என்பதாகும். சில உத்ஸவங்களில் 8ஆம் திருநாளன்று இந்த வையாளி நடைபெறும். விருப்பன்திருநாள், பூபதித்திருநாள், பங்குனி ப்ரஹ்மோத்ஸவம் ஆகியவற்றோடு அத்யயன உத்ஸவத்தில் இராப்பத்து 8ஆம் திருநாளன்று கோண வையாளி நடைபெறும்.
 30) ஹொய்சாளர்கள்  கி.பி.1220-1295 இடைப்பட்ட காலத்தில் திருவரங்கத்தில் பல திருப்பணிகள் மேற்கொண்டனர். அவற்றில்  சிறப்புடையனவாக தன்வந்த்ரி ஸந்நிதியின் விரிவாக்கம், ஆயிரங்கால் மண்டபம் கட்டுமானம், திருக்குழலூதும் பிள்ளை திருக்கோயில் நிர்மாணம் (ரங்கவிலாஸ் மண்டபத்தின் மேலைப்பகுதியில் உள்ளாண்டாள் ஸந்நிதிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த ஸந்நிதி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 
 31) வையாளி ஊர்வலம் இவர்கள் காலத்திலே ஏற்படுத்தப்பட்ட  ஒரு நிகழ்ச்சியாகும். ஏறத்தாழ கி.பி.1129இல் ஹொய்சாள மன்னன் சோமேƒவரனின் உதவியோடு மலர்ந்த “மானசோல்லாசம்”  எனும் நூலில் ‘வஹ்யாளி’ எனும் குதிரை ஏற்றம் பற்றிய வீர விளையாட்டு பேசப்படுகிறது. (வஹ்யாளி என்னும் சொல்லே வையாளி என்று திரிபு அடைந்து ள்ளது)
 32) இவ்வாறு வரலாற்றுச் சிறப்புடைய குதிரைப் பாய்ச்சல் எனும் குதிரையாட்டத்தினை (வையாளியினை)  தெற்கு கலியுகராமன் வீதியின் (சித்திரை வீதி) கோபுர விதானத்தில் காணலாம். குதிரைச் சேவகர்கள் குதிரையைக் கயிற்றால் பிணைத்துக் கைகளால் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். குதிரைகள் முன் கால்களைத் தூக்கிக் கொண்டு பாய்ந்து ஆடுகின்ற காட்சி இக்கோபுரத்தின் அழகுக்கு மேலும் எழில் கூட்டுகின்றது.
 33) ஒவ்வொரு நாளும் வாஹனத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்த பிறகு நான்முகக் கோபுர வாசலில் (நான்கு முகங்கள் கொண்ட அமைப்பை உடையதால் இதற்குத் தெற்குநான்முகக் கோபுர வாசல் என்று பெயர். இதைப் போன்று கிழக்குப் பகுதியில் வெள்ளைக் கோபுரமும், வடக்குப் பகுதியில் தாயார் ஸந்நிதிக்கு அண்மையில் உள்ள கோபுரமும் நான்கு முகங்களைக் கொண்டவை. நான்முகன் கோபுரம் என்று கூறுவது தவறு.) வாகனங்களுக்கு நம்பெருமாள் எழுந்தருள்வதற்கு முன்பு ஜீவப்ரதிஷ்டை நடைபெறும். அவைகள் ஆத்மாவுடன் கூடிய அந்தந்த விலங்கு வகையைச் சார்ந்ததாக அமைந்திருப்பதால் அந்த வாகனத்திற்கு அமுது படைக்கப்படும். அதன்பிறகு சொக்கநாத நாயக்கரால் (கி.பி. 1659-1682) நிர்மாணிக்கப்பெற்ற மண்டபத்தில் திருவந்திக்காப்பு நடைபெறும்.                              (தொடரும்)

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

சித்திரை விருப்பன் திருநாள்-1
1) சிருங்கேரி மடத்தைச் சார்ந்தவரான மாதவவித்யாரண்யர் என்பவரின் அருளாசியுடன் கி.பி. 1336ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யம் துங்கபத்ரா நதிக்கரையில் நிறுவப்பட்டது. அதன் தலைநகரமாக ஹம்பி விளங்கியது.
2) விஜயநகரசாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்கள் சங்கமனுடைய இரு குமாரர்களான முதலாம் ஹரிஹரரும், புக்கரும் ஆவர். புக்கரின் புதல்வர்களில் ஒருவர் வீரகம்பண்ண உடையார்.
3) இந்த வீர கம்பண்ண உடையாரே, செஞ்சி மன்னனான கோணார்யன், சாளுவ மங்கு ஆகியோருடைய உதவியுடன் அழகிய மணவாளனை (கி.பி. 1371ஆம் ஆண்டு) பரீதாபி ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் நாள் 48ஆண்டுகள் கழிந்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்தான். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ( அ.கீ. Nணி. 55/1892) ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
4) அழகிய மணவாளன் ‘நம்பெருமாள்’ என்ற சிறப்புத்திருநாமத்தைப் பெற்றது கி.பி.1371ஆம் ஆண்டிற்குப் பிறகுதான். அந்தத் திருநாமம் ஈரங்கொல்லி என்று அழைக்கப்படும் ஒரு வண்ணானால் அளிக்கப்பட்டது.
5) முதலாம் புக்கரின் பேரனும் 2ஆம் ஹரிஹர ராயரின் மகனும், ராம பூபதியின் பெண் வயிற்றுப் பேரனுமாகிய விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையார் நம்பெருமானால் மீண்டும் ப்ரதிஷ்டை கண்டருளிய ரேவதி நக்ஷத்ரத்தில் திருத்தேர் உத்ஸவம் ஏற்படுத்தி வைத்தான்.
6) இந்த விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையாரின் வளர்ப்புத்தாயான கண்ணாத்தை என்பாள் இந்த உத்ஸவம் நடைபெறுவதற்கு பொற்காசுகள் தந்தமை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.
7) கி.பி. 1371ஆம் ஆண்டு அழகிய மணவாளன் ஆஸ்தானம் திரும்பிய போதிலும் ப்ரணவாகார விமானமும் பெரும் பாலான மண்டபங்களும் கோபுரங்களும் பாழ்பட்ட நிலையில் காணப்பட்டன. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், குறுநில மன்னர்கள், படைத்தளபதிகள் ஆகியோருடைய உதவி கொண்டு இந்தக் கோயிலை மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கு 12 ஆண்டுகள் ஆயின.
8) கர்ப்பக்ருஹமும் மற்றைய மண்டபங்களும் பாழ்பட்ட நிலையில் இருந்ததால் அவற்றையெல்லாம் விருப்பண்ண உடையார் துலாபாரம் ஏறி (கி.பி. 1377) தந்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு சீரமைக்கப்பெற்று கி.பி. 1383இல் 60 ஆண்டுகளுக்குப்பின் நம்பெருமாள் உத்ஸவம் கண்டருளினார்.
9) கி.பி. 1383ஆம் ஆண்டுதான் 60 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியதொரு விழாவான விருப்பந்திருநாள் கி.பி. 1383ஆம் ஆண்டு மே மாதம் அதாவது சித்திரை மாதத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.
10) தேவஸ்தான நிதிநிலைமை மிக மோசமான நிலையில் இருந்ததாலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விழா நடைபெற இருப்பதாலும் திருவரங்கத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் உள்ள அனைவரும் தம்மால் இயன்ற தானியங்களையும், மாடு போன்ற விலங்கினங்களையும் தானமாகக் கோயிலுக்குத் தந்துதவ வேண்டுகோளின்படி பல மண்டலங்களிலிருந்த பாமர மக்கள் தங்களுடைய விளைபொருள்கள், பசுமாடுகள் ஆகியவற்றைத் தானமாகத் தர முற்பட்டனர்.
11) அதன் தொடர்ச்சியாகத்தான் நம்மால் “கோவிந்தா கூட்டம்” என்று அழைக்கப்படும் பாமர மக்கள் இன்றும் பல்வேறு  வகைப்பட்ட தான்யங்களையும் பசுமாடுகளையும் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பித்து வருகின்றனர்.
12)  கோயிலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் கிருஷ்ணராய உத்தம நம்பி. மேலும் விருப்பண்ண உடையார் 52 கிராமங்களை திருவிடையாட்டமாகத் தந்தார். அவருடன் வந்த குண்டு ஸாளுவையர் நம்பெருமாள் கொடியேற்றத்தின்போது எழுந்தருளும் மண்டபமாகிய வெண்கலத் திருத்தேர்த்தட்டினைப் பண்ணுவித்தார்.
13) தற்போது இந்த இடத்தில் மரத்தினாலான மண்டபமே உள்ளது. ஆயினும் வழக்கத்தில் கொடி யேற்றத்தின்போது நம்பெருமாள் எழுந்தருளும் இந்த மண்டபத்திற்கு வெண்கலத் தேர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
14) இந்த விழாவில் கொடியேற்றத் திருநாளன்று (03.05.2010 திங்கட்கிழமை விடியற்காலை) கோயில் கணக்குப்பிள்ளை நம்பெருமாள் திருவாணைப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விட்டதாகப் பட்டயம் எழுதுதல் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
15) மேலும் சக்கிலியர்களில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஒருவர் பெரியபெருமாளுக்கு வலது காலணியையும், மற்றொருவர் இடதுகாலணியையும் கோயில் கொட்டாரத்தில் கொண்டு வந்து சேர்ப்பர்.
16) வலது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் இடது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது. அவரவர்களுக்குப் பெரியபெருமாள் காட்டிக் கொடுத்த அளவில் காலணியைக் கொண்டுவந்து சேர்ப்பர். (தொடரும்)

ஸ்ரீ அரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர்.